ஜெர்மனியில் தலைநகர் பெர்லினில் நிர்வாணமான நிலையில் சூரியக்குளியல் போட்டுக்கொண்டிருந்தவரின் மடிக்கணினி பையை காட்டுப்பன்றி திருடிச்செல்வதும், அதை அவர் துரத்திச் செல்லும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
ஜெர்மனியில் இயற்கையுடன் ஒன்றி வாழ்வது என்பது அந்நாட்டு மக்களில் கலாச்சாரத்தில் ஒன்றாக இருந்து வருகிறது. இதற்காக அந்நாட்டின் கோடைகாலங்களில் பூங்கா மற்றும் வனப்பகுதிகளுக்கு வரும் இயற்கை ஆர்வலர்கள் நிர்வாணமான நிலையில் சூரியக்குளியல் இடுவது, இயற்கையை ரசிப்பது என்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அவ்வாறு ஜெர்மனி தலைநகர் பெர்லினினில் உள்ள டீஃபெல்சி பூங்காவில் இயற்கை ஆர்வலர் ஒருவர் கடந்த புதன்கிழமை இயற்கை சூழலை ரசித்தவாறு நிர்வாண நிலையில் சூரியக்குளியலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு குட்டிகளுடன் வந்த காட்டுப்பன்றி ஒன்று அவரின் மடிக்கணினி பையை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளது. இதனை கண்ட அவர் நிர்வாணமான நிலையிலும் அதனை பிடிக்க அந்த பூங்காவை வலம் வந்தார். இந்த நகைச்சுவையான காட்சிகளை அடீல் லேண்டவுர் என்ற அப்பகுதி நடிகை ஒருவர் படம் பிடித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தற்போது 10,000க்கும் அதிகமானோரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பலரும் இந்த சம்பவம் தொடர்பாக பலரும் வேடிக்கையான கருத்துக்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.




















