இலங்கையில் அதிபர் தேர்தலுக்கு பின்னர் ராஜபச்சே சகோதரர்கள் மீண்டும் ஒரு வெற்றியை குவித்துள்ளனர்.
இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்களது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்கு சூப்பர் மெஜாரிட்டி கிடைத்துள்ளது. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதையடுத்து இலங்கையில் ராஜபக்ச சகோதரர்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கியது. இந்த வெற்றியின் சூடு தணிவதற்குள் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நினைத்த கோத்தபய ராஜபக்சே, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதங்கள் இருந்த நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்தார். அவரது அண்ணனும், இலங்கையின் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச இடைக்கால பிரதமராகத் தொடர்ந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு கொரோனா எதிரொலியாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தலால் எழுந்த சவாலை சுகாதாரத்துறையின் ஒத்துழைப்புடன் முறியடித்து நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது இலங்கை தேர்தல் ஆணையம். வழக்கமாக ஓட்டெடுப்பு முடிந்த அன்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஆனால் கொரோனா பிரச்னை எதிரொலியாக நேற்று காலை வாக்குகள் எண்ணப்பட்டு இரவில்தான் முடிவுகள் வெளிவரத் தொடங்கின. இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 இடங்களில் 196 இடங்கள் நேரடி வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும். 29 இடங்கள், கட்சிகள் பெற்ற வாக்குகளின் சதவீத அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.
இந்த தேர்தலில் இலங்கை வரலாற்றில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் வெற்றியை குவித்துள்ளது ராஜபக்ச சகோதரர்களின் ஸ்ரீலங்கா பொதுஜனா பெரமுனா கட்சி. அந்த கட்சி மொத்தம் 145 இடங்களை வென்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்று இலங்கை நாடாளுமன்றத்தில் சூப்பர் மெஜாரிட்டியைப் பெற்றுள்ளது. மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் கூட்டணிக் கட்சிகள் 5 இடங்களில் வென்றுள்ளன. கடந்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, இந்த தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 106 இடங்களில் வென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த முறை மிஞ்சியது ஒரே ஒரு இடம்தான்.ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 54 இடங்களில் வென்றுள்ளது. முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசாவை பிரதமர் வேட்பாளராக அறிவித்து களம் இறங்கிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சிதான் தற்போது இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. பிரதான தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கடந்த முறை 16 இடங்கள் கிடைத்திருந்த நிலையில் தற்போது 10 இடங்களாக சுருங்கியுள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று புதிதாக உருவான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தனியாக களம் கண்டு வாக்குகளை பிரித்ததும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக இடங்களில் வெற்றிபெற முடியாமல் போனதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒரு இடத்தில் வென்றுள்ளது. இலங்கையில் மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அசுர பலத்துடன் ராஜபக்ச மீண்டும் பிரதமராக அரியணை ஏற உள்ளார். வரும் 11ந்தேதி அவர் பிரதமராக பதவியேற்பார் என தகவல்கள் கூறுகின்றன.


















