அமெரிக்காவில் டிக் டாக்கை அதிபர் ட்ரம்ப் தடை செய்தால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என டிக்டாக்கின் தாய் நிறுவனமான Byte Dance தெரிவித்துள்ளது.
இந்தியா சீனா எல்லை மோதலை தொடர்ந்து இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி சீனாவை சேர்ந்த டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சீன உளவுத்துறையின் ஒரு கருவியாக இருக்கக்கூடும் என்றும் தேசிய பாதுகாப்பைக் கருதியும் அமெரிக்காவும் டிக் டாக் செயலியைத் தடை செய்ய திட்டமிட்டிருந்தது.
இதையடுத்து, அமெரிக்க செயல்பாடுகளுக்கான டிக் டாக்கின் உரிமத்தை வாங்க Byte Dance நிறுவனத்துடன் அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு டிக்டாக்கை விற்பனை செய்ய Byte Dance நிறுவனம் சமீபத்தில் மறுப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து டிக்டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயலிகள் அடுத்த 45 நாட்களுக்குள் அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் இந்த முடிவுக்கு டிக்டாக்கின் தாய் நிறுவனமான Byte Dance எதிர்வினையாற்றியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நிறுவனம், சட்டத்தின் விதி நிராகரிக்கப்படாமல் இருப்பதற்கும், எங்கள் நிறுவனமும் எங்கள் பயனர்களும் நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கவும் எங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து தீர்வுகளையும் நாங்கள் பின்பற்றுவோம் – அவ்வாறு நிர்வாகத்தால் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அமெரிக்க நீதிமன்றங்களை நாடுவோம் என தெரிவித்துள்ளது.



















