கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பகுதியில் அவரது அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
கல்முனை பிராந்தியத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒத்திசைவுடன் தான் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியும்.
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்திருந்தது.
எல்லை விடயங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவைகள் பேசித் தீர்க்கப்பட வேண்டும். எங்கள் கட்சிக்கு ஜனநாயக போராளிகள் தொண்டர்கள் பல்வேறு வழிகளில் வாக்குகளை பெற்று தந்திருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வி அடைந்தமைக்கு சில சூழ்ச்சிகளும், மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட தவறான பிரச்சாரங்களும் காரணமாகும் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.
இது தவிர எனக்கு கிடைக்கப்பெற்ற இச்சந்தரப்பத்தை பயன்படுத்தி எமது மாவட்டத்தின் அபிவிருத்திக்கும், உரிமைக்கும் குரல் கொடுப்பேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.