மாவை சேனாதிராசாவின் கட்சி தலைமையை நாம் கைப்பற்ற முயலவில்லை. ஊடகங்களே அப்படியொரு செய்தியை உலாவவிட்டுள்ளன. இதனால் மாவை சேனாதிராசாவிற்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நானும், சிறிதரனும் மனம் வருந்துகிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
பருத்தித்துறையில், தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சி தலைவர் இதனால் எந்த மனச்சஞ்சலமும் பட வேண்டியதில்லை. கட்சித் தலைவர் இதனால் வருத்தப்பட்டால் நானும் சிறிதரனும் இதனால் வருத்தப்படுகிறோம். தலைவரை கட்சித் தலைமையிலிருக்கு நீக்குவதாக சொல்லப்படவில்லை, அப்படியொரு எண்ணமுமில்லை, இப்பொழுது தலைமையில் மாற்றம் தேவையில்லையென்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஊடகங்கள் அதற்கு எதிர்மாறான கருத்தையே ஊடகங்கள் சொன்னதால், அதனால் தலைவருக்கு எதாவது மனவருத்தம் ஏற்பட்டால் அதற்கு மனவருத்தத்தை தெரிவித்து கொள்கிறென்.
மாவை சேனாதிராசா எமது கட்சியின் தலைவர். கட்சி பின்னடைவை சந்திக்கின்ற போது தலைமையிலிருப்பவர்கள் தோற்பது வழக்கம். அது ஒரு அறிகுறி. அதனால் அவர் தோற்றிருக்கிறார். எங்களுடைய பொதுச்செயலாளரும் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது எங்களிற்கு பெரிய தோல்வி. 10 ஆசனங்கள் கிடைத்தது என்பது எமக்கு பெரிய தோல்வி.
மாவை சேனாதிராசாதான் என்னை அரசியலுக்கு இழுத்தவர். பலர் சொல்வது- சம்பந்தன்தான் என்னை அரசியலுக்கு இழுத்ததாக. அதில் சிறிய உண்மையுண்டு. 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையான நாடாளுமன்றத்தில் 2 முறை நாடாளுமன்ற ஆசனம் காலியானது. அந்த இரண்டு முறையும் அந்த இடத்திற்கு என்னை நியமிக்க மாவை சேனாதிராசா முயற்சித்தார். நான் இணங்கவில்லை.
ஆனால் போர் முடிந்த பின்னர் நாம் சில சட்ட வரைபுகளில் ஈடுபட்டதால், 2010இல் சரத் பொன்சேகாவுடனான இணக்கப்பாட்டை வரைவதில் ஈடுபட்டதால், அதன் பின்னர் சம்பந்தனும், மாவவையும் என்னை அழைத்தார்கள். அப்போது மறுத்தேன். பின்னர் சம்பந்தன் தனியாக பேசிய பின்னர் ஒத்துக் கொண்டேன்.
மூன்று முறையும் மாவை சேனாதிராசாதான் என்னை அழைத்தார். தேசியப்பட்டியல் எம்.பியான பின்னர், பியசேன கட்சி மாறியதால், என்னை அம்பாறையை பார்க்கும்படி சொல்லியிருந்தார். என்னை அம்பாறைக்கு அழைத்து சென்று, அங்குள்ளவர்களை அறிமுகம் செய்தார்.
சென்ற பாராளுமன்ற தேர்தலில் சேனாதிராசாதான் எனக்காக அதிகம் பிரச்சாரம் செய்தார். இன்று எங்கள் இருவருக்குமிடையில் பெரிய சர்ச்சையிருப்பதை போல ஊடகங்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது தவறு. அப்படியான ஒரு போட்டியோ, சர்ச்சையோ கிடையாது.
நான் அவர் மீது வைத்துள்ள ஒரேயொரு குற்றச்சாட்டு மற்ற வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்தபோது, நான் அவரது கவனத்திற்கு கொண்டு வந்தேன். அவர் நடவடிக்கை எடுக்கவில்லையென்பதே எனது குறை. ஒரேயொரு முறை- விமலேஸ்வரி குற்றச்சாட்டு சுமத்தியபோது நடவடிக்கையெடுத்தார். ஏனைய சந்தர்ப்பங்களில் நடவடிக்கையெடுக்கவில்லை.
தேர்தல் காலத்தில் நான் இதை சொல்லவில்லை. தேர்தல் காலத்தில் சுமந்திரனை தோற்கடிப்போம் என பத்திரிகையொன்றில் செய்தி வெளியானபோது, அந்த பத்திரிகை பிரதிகளை கொள்வனவு செய்து விநியோகித்தேன். வேறு ஒன்றும் சொல்லவில்லை. பத்திரிகை உரிமையாளர் சக வேட்பாளர் என்பதால் பேசாமலிருந்தேன். கே.வி.தவராசா என்பவரின் பெயர் எமது தேசியப்பட்டியில் இருந்ததால், அவர் என்னைப்பற்றி பொய்யான செய்திகளை சொன்னபோதும், நான் பேசாமல் இருந்தேன்.
ஏனெனில், அவர்கள் செய்யும் தவறுகளை நானும் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். தேர்தல் முடிந்த பின்னர் நான் சொல்கிறேன். தேர்தலிற்காக பேசாமல் இருந்தேன். இது சம்பந்தமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும், அவர் நடவடிக்கையெடுக்கவில்லையென்றே தெரிவித்தேன். அவர் எனக்கு எதிராக செயற்பட்டார் என சொல்லவில்லை.
தேசியப்பட்டியல் விவகாரம் சம்பந்தமாக 7ஆம் திகதி இரவு நானும், சிறிதரனும் மாவையை சந்தித்து பேசினோம். தேசியப்பட்டியல் பற்றி சிறிதரன் கேட்டார். அதற்கு அவர், பெண் பிரதிநிதித்துவம் தொடர்பாக சசிகலா ரவிராஜை யோசிக்கலாம் என்றார். அதைத்தான் சம்பந்தனிடம் சொல்லியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்தலின் முன்னர் நியமன குழுவில், முதலாவது ஆசனம் திருகோணமலையை சேர்ந்த குகதாசனிற்கு வழங்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது. என்னுடைய நிலைப்பாடு- எடுக்கப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பது.
ஆனால் அப்படி நடக்கவில்லை. அம்பாறையின் தேவையென்பது மிக முக்கியமானது. நான் அறிந்தபடி, 1931ஆம் ஆண்டின் பின் அம்பாறையில் ஒரு தமிழ் பிரதிநிதியும் தெரிவாகவில்லை. அதை குறித்து சிந்தித்து கட்சி தலைவர் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். ஆனால், என்னுடைய நிலைப்பாடு எடுத்த தீர்மானத்தின்படி நாம் ஒழுக வேண்டுமென்பதுதான். அதை தொடர்ந்து தேவையற்ற சர்ச்சைகள் அவசியமில்லை.
பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தம்முடன் பேசவில்லையென சொல்லியுள்ளனர். நான் கட்சி தலைவர் அல்ல. பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் நான் பேச வேண்டிய அவசியமில்லை. அது பற்றி சம்பந்தன் ஐயா பேசியிருப்பார் என நினைக்கிறன். அது பற்றி மேலதிக விளக்கமெதுவும் நான் கொடுக்க முடியாது என்றார்.
தேசியப்பட்டியல் நியமனத்தை முழுக்க முழுக்க எம்.ஏ.சுமந்திரன்தான் நடைமுறைப்படுத்தியிருந்தார். எனினும், இந்த கூட்டத்தில் அது தொடர்பில் வேறு விதமான தகவல்களையே அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.