கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து, அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
லேசான அறிகுறிகள் இருந்ததன் காரணமாக எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியது. இதனையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ் பி பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது எனவும். சிறப்பு மருத்துவ குழுவினர் கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.