13 ஆண்டுகளுக்கு முன் நிலத்தகராறில் அண்ணனை, தம்பி வெட்டி கொலை செய்துள்ளார். இதையடுத்து 13 ஆண்டுகள் கழித்தும் தந்தையை கொன்றவனை மகன் பழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஊராட்சியை சேர்ந்தவர் அந்தோனி ராஜ். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர் ஆரோக்கியசாமி மற்றும் ரோக்குராஜ்.
இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இதையடுத்து, இவர்களுக்கு இருங்களூர் நடுகரை ஆற்றோர பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சில பகுதிகளை வளைத்துப்போட்டு விவசாயம் செய்து வந்தனர்.
இந்நிலையில், 13 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தின் முன் பாதை தொடர்பாக சகோதரர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அண்ணன் ஆரோக்கியசாமியை தம்பி ரோக்குராஜ் ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் 12 ஆண்டுகள் தண்டனை பெற்ற ரோக்குராஜ் கடந்த ஆண்டு விடுதலையானார்.
ரோக்குராஜின் மகன் ஜான்டேவிட் ஆட்டோ ஓட்டுநராகவும், ஆரோக்கியசாமியின் மகன் ஜேசுராஜ்(55) ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார்.
இதன்பின்னர், 13 ஆண்டுகளுக்கு பிறகு விவசாய நிலங்களுக்குள் வண்டி செல்வதற்காக பாதை அமைப்பது தொடர்பாக மீண்டும் இரு குடும்பத்தினருக்கும் இடையில் தகராறு ஏற்ப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜேசுராஜ் பாதை விடாததால் ரோக்குராஜ் பாதையை முள் வெட்டி அடைத்துள்ளார். இதனால் கடந்த நாளான செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் தகராறு வெடித்துள்ளது.
ஏற்கெனவே தந்தையை கொலை செய்த ரோக்குராஜ் மீது கோபத்தில் இருந்த ஜேசுராஜ், மீண்டும் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்துள்ளார்.
இதனால், தனது மகன் பிரான்ஸிஸ் உடன் சேர்ந்து ரோக்குராஜ் மற்றும் அவரது மகன் ஜான்டேவிட்டை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகராறில் காயமடைந்த ஜேசுராஜ் அவரது மகன் பிரான்ஸிஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் ஜேசுராஜ், அவரது மகன் பிரான்ஸிசை கைது செய்து விசாரணைய தொடங்கினர்.
13 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இடத்தகராறில் அண்ணனை கொலை செய்துவிட்டு சிறை சென்ற தம்பி, அண்ணன் மகனால் பழிதீர்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.