உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் ஜெர்மனி பிரதமர் ஏங்கலா மெர்கலும் ஒரு சந்திப்பின்போது இந்திய பாரம்பரியப்படி வணக்கம் செலுத்திக்கொண்டனர்.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் பாதிப்பை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. கொரோனா ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால் ஒருவருடன் நெருக்கமாக நிற்கவோ தொட்டுப் பேசவோ வேண்டாம். கை குலுக்காதீர்கள், அடிக்கடி கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட பலவேறு அறிவுரைகளை உலக சுகாதார அமைப்பு மற்றும் மருத்துவர்கள் மக்களுக்கு வழங்கி வருகின்றன. இதன் காரணமாக உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் கூட கை குலுக்குவதைத் தவிர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்தியர்களின் பாரம்பரிய வரவேற்பு முறையான வணக்கம் சொல்லும் முறையை உலக நாடுகளே திரும்பிப் பார்த்து அதைப் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன. அதாவது நம்முடைய இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லும் முறையின் தாத்பர்யத்தையும் அருமையையும் உலக நாடுகள் இந்த கொரோனாவைரஸ் தொற்று பாதிப்புக்குப் பின் போற்றத் தொடங்கியுள்ளன. கொரோனாவுக்கு பின்னர் அதிபர் ட்ரம்ப், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு உள்ளிட்ட பல தலைவர்கள் வணக்கம் செலுத்தும் நடை முறையை பின்பற்றுகின்றனர்.
இதனிடையே அரசு முறைப்பயணமாக பிரான்ஸுக்கு சென்ற ஜெர்மனி பிரதமர் ஏங்கலா மெர்கலை அந்நாட்டில் உள்ள பிரேகன்கான் கோட்டையில் அதிபர் இமானுவேல் மேக்ரோன் வரவேற்றார். அப்போது இருவரும் கைகளை குளுக்காமல் இந்திய பாரம்பரிய முறைப்படி வணக்கம் செலுத்திக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Willkommen im Fort de Brégançon, liebe Angela! pic.twitter.com/lv8yKm6wWV
— Emmanuel Macron (@EmmanuelMacron) August 20, 2020



















