தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணை நீர்மின் நிலையத்தில் 4 ஆவது அலகு முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையின் நிர்மின் நிலையத்தில் 4 ஆவது அலகு முனையத்தில் நேற்று இரவு 19 பேர் பணியாற்றி வந்தனர். இதனிடையே இரவு 10.30 அளவில் அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளது. இதில் முனையத்தில் சிக்கியிருந்த 19 பேரில் 10 பேர் பத்திரமாக வெளியேறினர். இருப்பினும் கடுமையான தீ காரணமாக மீதமுள்ள 9 பேரால் வெளியேற முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முனையத்தில் சிக்கியுள்ள 9 பேரையும் மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நீர்மின் நிலைய தீவிபத்தில் சிக்கிய 9 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு பேர் உதவிப் பொறியாளர்கள் என நாகர்கர்னூல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த விபத்து தொடர்பாக சிஐடி விசாரணை நடத்த தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.



















