தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மித்ரா மோட்டர்ஸ் என்ற கார் சர்விஸ் நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 கார்கள் உட்பட ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசமானது. இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்த அதிகாரிகள், மின்கசிவால் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்திற்கு உண்மையான காரணம் என்பது தெரியவந்துள்ளது. அந்த தகவல் தான் தற்போது அனைவரையும் அதிரவைத்துள்ளது. ஏனென்றால் இந்த தீவிபத்துக்கு காரணம் ஒரே ஒரு எலி தான். தீ விபத்து நடைபெற்ற நாளன்று பதிவான சிசிடிவி காட்சிகளைத் தனியார் தடயவியல் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்ததில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. சம்பவ நாளன்று அந்த நிறுவனத்தில் பூஜை நடைபெற்றுள்ளது. இதற்காக ஊழியர் ஒருவர் டேபிளின் மேல் அகல் விளக்குகளை ஏற்றிவைத்துள்ளார். ஆனால் அலுவலகம் மூடப்படும் போது ஒரே ஒரு விளக்கு மட்டும் அணைக்கப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் நள்ளிரவில் அந்த விளக்கிற்கு அருகே வந்த எலி ஒன்று அவ்விளக்கை எடுத்துக் கொண்டு சென்றபோது சூடு தாங்க முடியாமல் இருக்கையின் மீது போட்டுவிட்டது. இதனை அடுத்து அந்த சேர் தீப்பிடித்து, அதன் பின்னர் அந்த பகுதி முழுவதும் தீ பிடித்தது. முதலில் முதல் மாடியில் மளமளவென்று பரவிய தீ, அதன் பின்னர் தரை தளத்திலும் பரவி ஒட்டுமொத்த அலுவலகத்தையும் தீக்கிரையாக்கி விட்டது. இது தொடர்பான சிசிடிவு காட்சிகளை பார்த்த அந்நிறுவனத்தின் உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்தார்.





















