கோவாவில் கனமழை காரணமாக விழுந்த நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை இயற்கை ஆரவளர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு மீண்டும் அதற்கு மறு வாழ்வு அளித்துள்ளனர்.
வடக்கு கோவாவில் உள்ள அரம்போர் கடற்கரைப் பகுதியில் சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று அமைந்திருந்தது. இந்த மரம் சுற்றுலாப் பயணிகள் இழைப்பாறுவதற்கும் அப்பகுதிமக்கள் யோக செய்யவும் சிறந்த இயற்கை நிழற்குடையாக இருந்து வந்துள்ளது. இதனிடையே கடந்த 5 ஆம் தேதி கோவாவில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து பாதிப்புக்குள்ளானது. இதில் இந்த ஆலமரமும் சரிந்து சாலையில் விழுந்துள்ளது.
இதனை கண்டு மனமுடைந்த உள்ளூர் வாசிகளும் இயற்கை ஆர்வலர்களும் அந்த மரத்தை மறு நடவு செய்ய திட்டமிட்டனர். இதற்காக ஆன்லைன் மூலம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். இதன் பயனாக சுமார் 2 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. பின்னர் தன்னார்வலர்களின் உதவியுடன் சுமார் 4 அடி ஜேசிபி மூலம் குழி தோண்டப்பட்டு மரம் மறு நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மரம் நடவு பணிகள் 2 நாட்கள் நடைபெற்றதாக தெரிவித்தனர். மேலும் ஒரு மரத்தை மீண்டும் மறு நடவு செய்ய கூட்ட நிதியளிப்பு முயற்சி பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.



















