தமிழகத்தில் இளைஞரை கொலை செய்து கோயில் வளாகத்தில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பெண் மற்றும் கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணதாசன்(36). ஹோட்டல் ஊழியரான, இவர் மனைவியை பிரிந்து, பண்ருட்டி காந்தி ரோட்டில் வசித்து வரும் கணவனை பிரிந்த மஞ்சுளா(29) என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். மஞ்சுளா கடந்த 4 ஆண்டுகளாக லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள வேணுகோபால்சுவாமி கோவில் அர்ச்சகர் கோபிநாத்(54) வீட்டில் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி செய்து வந்துள்ளார்.
அப்போது கோபிநாத்- மஞ்சுளா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியது. இதனால் இதை அறிந்த கண்ணதாசன் அடிக்கடி கோபிநாத்தை மிரட்டியுள்ளார்.
குடிப்பழக்கம் கொண்ட கண்ணதாசன் அடிக்கடி மது அருந்திவிட்டு, கோபிநாத் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்து வந்துள்ளார்.
இதனால் மஞ்சுளா மற்றும் கோவில் அர்ச்சர்க கோபிநாத் கண்ணதாசனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் படி கடந்த 11-ஆம் திகதி, இரவு கண்ணதாசனை கோவிலுக்கு வரவழைத்து கொலை செய்து, அவரது உடலை கோவில் வளாகத்தில் உள்ள அறையில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.
அறையில் பள்ளம் தோண்டிய சுவடு தெரியாமல் இருப்பதற்காக கொத்தனார் உதவியுடன் சிமெண்ட் பூசி மறைத்துள்ளனர்.
அதன் பின் கடந்த 17-ஆம் திகதி கண்ணதாசனை காணவில்லை என்று மஞ்சுளா ஒரு புகார் கொடுக்க, பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில், கண்ணதாசன் மொபைல் போன் அழைப்பு குறித்த தகவல் பெற்று விசாரித்தனர்.
இதில், கோபிநாத் தனது மொபைல் போனில் இருந்து மஞ்சுளாவிற்கும், கண்ணதாசனுக்கும் பேசியது தெரியவந்தது.
கண்ணதாசன் இறப்பதற்கு முன் அவருடன் கோபிநாத் பேசியுள்ளார். கண்ணதாசனின் மொபைல் போன் சிக்னல் கோவில் வளாகத்தில் கிடைத்ததால் பொலிசாருக்கு கோபிநாத் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பொலிசார் கோபிநாத்திடம் விசாரணை மேற்கொள்ள சென்ற போது, அவர் கடந்த 17-ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்ததாக பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், கோவில் வளாகத்தில் கண்ணதாசனை ராடால் தலையில் அடித்து கொன்று, அங்கேயே உடலை புதைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் வி.ஏ.ஓ. மற்றும் பொலிசார் முன்னிலையில் கோவில் அறையில் உள்ள பகுதியில் உடல் எடுக்கும் பணி நடைபெற்றது.
மூன்றுக்கு 3 அடி அகல பகுதியில் 6 அடி ஆழம் பள்ளத்தில் நிற்க வைத்த நிலையில் பிணத்தை புதைத்திருந்தது தெரியவந்தது.
அதன் பின், பிரேதத்தை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்த பொலிசார், மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி, கோபிநாத் மற்றும் மஞ்சுளா-வை கைது செய்த் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.