தமிழகத்தில் 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்டு, உடல்கள் சாக்குகளில் கட்டி கிணற்றுக்குள் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் சுமார் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில், வசித்து வந்த பவானி என்பவரை கடந்த சில தினங்களாகவே காணவில்லை. இவர், அங்கிருக்கும் மகாராஜா நகர் பகுதியில் உள்ள முருகன், திருநங்கை அனுஷ்கா ஆகியோரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதன் காரணமாக அவருடன் பழகிய குடியிருப்புவாசிகள், முருகன், அனுஷ்கா ஆகியோர் இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டில் இரத்தக்கரை இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் இது குறித்து அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதில், தங்களுக்கு சேலத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவருடன்தான் கடைசியாக பவானி சென்றதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் ரிஷிகேஷ் உள்பட 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பவானி, அனுஷ்கா, முருகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டதாகவும், மகாராஜ நகரில் உள்ள ஒரு வீட்டில் அவர்களின் உடலை போட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது, அவர்கள் கூறியது போல் உடல்கள் இல்லை.
இதனால் பொலிசார் மீண்டும் நடத்திய தீவிர விசாரணையில், பவானி உள்ளிட்ட 3 பேரின் உடல்களை சாக்குமூட்டையில் கட்டி பாளையங்கோட்டை கக்கன்நகர் புறவழிச்சாலை அருகே உள்ள 2 கிணற்றில் போட்டுவிட்டதாக கூறியுள்ளனர்.
அதன் பின், பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, இரண்டு கிணற்றிலும் சாக்கு மூட்டைகள் மிதந்திருக்கின்றன.
இதையடுத்து கிணற்றில் மிதந்த உடல்களை மீட்ட பொலிசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரிஷிகேஷ் உள்ளிட்ட 3 பேரிடமும் ஏன் கொலை செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.