புதுச்சேரியில் புதுமாப்பிள்ளை ஒருவர் தாயை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பாகூரை சேர்ந்த ராணி என்பவர் கணவரை பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்ற ராணி அங்கிருந்து தான் சம்பாதித்த பணத்தை மகன் அய்யனாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதைவைத்து அவரும் புதிதாக வீடு கட்டி, தொழில் தொடங்கியுள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு புதுச்சேரி திரும்பிய ராணி தன்னிடம் இருந்த மீதிப் பணத்தை தனது மகளுக்கு கொடுக்க விரும்பியதாக கூறியுள்ளார்.
இதைக் கேட்ட அய்யனார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த மாதம் 20-ஆம் திகதி அய்யனார் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, புதிதாக கட்டிய வீட்டில் தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அய்யனாரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், கடந்த 11-ஆம் திகதி மதுபோதையில் இருந்த அய்யனாருக்கும், ராணிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 13-ஆம் திகதி ராணி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின் இது குறித்து வழக்கு பதிவு செய்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ராணியின் கழுத்து நெரிக்கப்பட்டதும், தலையில் அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
அதைவைத்து பொலிசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தியதில் மகன் அய்யனாரே ராணியை கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பிச்சென்றது தெரியவர, பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.