அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஷ்க்கு. அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ஆதரவும், இழப்பும் உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது அதிபர் பதவிக்கு போட்டியிடும் டிரம்ப், ஜோ பிடெனைக் காட்டிலும், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் பற்றி தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி, ஆப்ரிக்க வம்சாவளி என பல்வேறு பெருமைகளை ஹாரிஸ் பெற்றுள்ளார். கமலாவின் தாய் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், கமலா ஹாரிசுக்கு தமிழகத்தில் கூட அமோக ஆதரவு இருக்கிறது.
தற்போது, 55 வயதாகும் கமலா ஹாரிஸ், இந்திய தாய்க்கும், ஜமைக்காவை சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர்.
அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த அவர் கலிபோர்னியா மாகாண செனட்டராக இருந்துள்ளார். இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கமலாவை இந்தியாவின் 2வது குடிமகளாக கொண்டாடி வந்தாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவை காட்டிலும் எதிர்ப்புகளே அதிகம் என்கின்றன சில கருத்துக் கணிப்புகள்.
ஏனெனில், கமலா தன்னை எப்போதும் கறுப்பினத்தவராக அடையாளப்படுத்துபவர் என்றும், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துக்களை அவர் கொண்டிருப்பதாக கூறுகின்றனர் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.
டெக்சாசின் இந்திய-அமெரிக்க கன்சர்வேட்டிவ்ஸ் உறுப்பினர் ராதா தீட்சித் கூறுகையில், எந்த இடத்திலும் கமலா தன்னை ஒரு இந்துவாகவோ அல்லது இந்திய வம்சாவளியாகவோ கூறிக் கொள்வதில்லை.
ஆனாலும், மக்கள் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கிறார்கள், என்றார். அமெரிக்கன்ஸ்ஃபார் இந்துஸ் அமைப்பின் நிறுவனர் ஆதித்யா சத்சாங்கி கூறுகையில், இந்திய வம்சாவளி என்பதைக் காட்டிலும் தன்னை ஆப்ரிக்க கருப்பின பெண் என்றே கமலா அங்கீகரித்துக் கொள்பவர்.
அவர் செனட்டரான பின்புதான் கலிபோர்னியாவில் ஊழல்கள் அதிகரித்தன, என்றார். லிவ்விங் பிளானட் பவுன்டேஷன் நிறுவனர் வியாஸ் கூறுகையில், தன்னை ஒரு கறுப்பின பெண்ணாகவே, கமலா எப்போதும் கூறிக் கொள்வார்.
அவர் இந்தியாவுக்கும், இந்துக்களுக்கும் எதிரானவர்களின் ஆதரவாளர், என்கிறார். அதே சமயம், கமலா ஹாரிசுக்கு பெரும் ஆதரவும் இருக்கத்தான் செய்கிறது.
அவர் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இந்தியர்கள் சார்பில் தனி குழுவும் அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
பிரசாரங்களில் தன்னை கறுப்பினத்தவராகவே கமலா முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், அமெரிக்க-இந்தியர்களுடனான தனது முதல் பிரசார கூட்டத்தில், சிறு வயது நாட்கள், சென்னையில் தனது அத்தையுடன் இருந்த காலங்கள், தனக்கு மிகவும் பிடித்த இட்லி பற்றி பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.