ஸ்பெயினைப்போன்று கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவும் நிலையில், பிரித்தானியா மீண்டும் முடக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜூலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் முதன்முறையாக R வீதம் 1ஐவிட அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், நாடு முழுவதற்குமான நடவடிக்கைகள் மீண்டும் கொண்டுவரப்படலாம்.
ஏற்கனவே, மான்செஸ்டரிலும் லைசெஸ்டரிலும் உள்ளூர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று இரவு முதல் பிளாக்பர்ன் மற்றும் ஓல்தாமிலுள்ளவர்கள் மற்றவர்கள் வீடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட இருக்கிறது.
இன்னொரு முறை பிரித்தானியாவை முடக்குவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ள நிலையில், ஸ்பெயினைப் போன்று கொரோனா தொற்று பிரித்தானியாவில் அதிகரிக்கும் நிலையில், நாட்டை முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஒரு சீரற்ற இலையுதிர்காலத்தையும் குளிர்காலத்தையும் எதிர்ப்பார்க்கும் நிலையில், அதிக தொற்றுக்கள் ஏற்படப்போகிறது என்று கூறியுள்ள மூத்த அதிகாரி ஒருவர், ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது, இன்றைய நிலைமையில் கொரோனா தொற்றுக்கள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளன என்றார்.
அப்படியிருக்கும்போது, செப்டம்பரில் பள்ளிகள் மீண்டும் திறக்கும் நிலையில், தொற்றுக்கள் இன்னும் அதிகரிக்கலாம் என்கிறார் அவர்.