ஸ்வீடனை சேர்ந்த 17 வயது சிறுமி கிரெட்டா துன்பெர்க், காலநிலை மாற்றத்திற்காக குரல் கொடுத்து வரும் நிலையில், ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளார்.
சிறுமி கிரெட்டா துன்பெர்க் காலநிலை மாற்றம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ஐ.நா.,வில் காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் போது அவர் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அவரது பேச்சுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். அதிபர் ட்ரம்ப் சிறுமியின் பேச்சை விமர்சனம் செய்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கிரெட்டா துன்பெர்க், காலநிலை மாற்றத்திற்கான தனது தொடர் பிரச்சாரத்தையடுத்து, ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளார். மீண்டும் பள்ளியில் சேருவது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் ட்வீட் செய்துள்ளார். மேலும் ஸ்கூல் பேக்குடன் மிதிவண்டியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். ஆனால் எந்த நகரத்தில் உள்ள பள்ளியில் தனது படிப்பை தொடரப் போவதாக அவர் கூறவில்லை.
அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளிக்கு சென்றார். அதன்பிறகு காலநிலை மாற்ற பிரச்சாரத்திற்காக பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ததால், தொலைதூர கல்வி முறையில் படித்தார். தற்போது மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
My gap year from school is over, and it feels so great to finally be back in school again! pic.twitter.com/EKDzzOnwaI
— Greta Thunberg (@GretaThunberg) August 24, 2020