கன்னட சினிமாவில் போதை பொருள் புழக்கம் பற்றிய செய்தி அதிர்வலையை கிளப்பிய நிலையில் அதன் காரணமாக பிரபல நடிகரின் திருமணம் நின்று போயுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்ற அனிகா என்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் அனிகா சில டிவி தொடர்களில் நடித்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதும் நடிகர், நடிகைகளுக்கு போதை மாத்திரகளை விற்றதும் தெரியவந்தது.
இதில் தொடர்புடைய நடிகர்கள், நடிகைகளிடம் விசாரணை நடத்த போதைப் பொருள் தடுப்பு பொலிசார் முடிவு செய்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.
இந்நிலையில், கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் அளித்தபேட்டியில், கன்னட சினிமாவில் போதை பொருள் புழக்கம் இருப்பது உண்மைதான்.
தனக்குத் தெரிந்த சில இளம் நடிகர்கள் இந்த பழக்கதில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
அவரின் இந்த பேட்டியால் பிரபல நடிகர் பவன் சவுரியாவின் திருமணம் நின்று போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சவுரியாவுக்கும் பெண்ணொருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தற்போது அவர் போதைப் பொருள் பயன்படுத்துவாரோ என்ற பயத்தில், பெண் வீட்டார் அவர் திருமணத்தை நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.