புத்தளம் பொம்பரிப்பு பகுதியில் உள்ள மதரசாவில் சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான அமைப்பு ஆயுத உற்பத்திக்கான பயிற்சி முகாம் ஒன்றை நடத்தி வந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி சிறிமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்றையதினம் சாட்சியமளித்த போதே இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்ததாவது,
குறித்த மதரசா 1989 இல் ஒரு மதப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு, 2011 இல் மதரசாவாக மாற்றப்பட்டு 2015 நவம்பர் 18 ஆம் திகதி முஸ்லிம் மத கலாசார விவகாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பட்டுள்ளது.
12 – 16 வயதுக்குட்பட்ட மாணவர்களே இங்கு பயிற்றப்பட்டுள்ளனர். இவர்கள் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்துக்கு தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ணப்பித்திருந்தார்கள்.
இங்கு நான்கு ஆசிரியர்கள் நிரந்தரமாக கடமையாற்றியதுடன், ஏழு ஆசிரியர்கள் தற்காலிகமாக கடமையாற்றியுள்ளார்கள். அதிபர் ஒருவரும் இங்கு கடமையிலிருந்தார். இங்கு மாணவர்களிடம் மாதந்த கட்டணமாக 4,000 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளது.
இங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கும், நிரந்தர ஆசிரியர்களுக்கும் வதிவிட வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன.
சஹ்ரான் உட்பட பலர் 2015 முதல் 2019 வரையில் இங்கு பயிற்சியளித்துள்ளதுடன், ‘Save the Pearl’ என்ற அமைப்பின் மூலம் மட்டக்குளி, மாதம்மே, புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 26 மாணவர்களே இங்கு பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்த தற்கொலைக் குண்டுதாரிகள் பலர் இங்கு பயிற்சி எடுத்துள்ளார்கள். சஹ்ரானும், இல்ஹாமும் மாணவர்களுக்கு தீவிரவாத விரிவுரைகளை வழங்கியதுடன் ரி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்துவது மற்றும் கைக்குண்டுகளைத் தயாரிப்பது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களுடைய பாதுகாவலராக கடமையாற்றிய சுல்தான் என்பவர் கைது செய்யப்பட்டு தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார் என அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.