நாட்டின் காலநிலை தொடர்பில் வளிண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல்நிலை காரணமாக எதிர்வரும் 18 மணித்தியாலங்கள் அடைமழை பெய்யும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
சில மாவட்டங்களில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமாக அடைமழை பெய்யலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது 70 – 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 200 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், குருணாகலை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.
இதேவேளை, நாட்டின் 4 மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் நியாகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, வலல்லாவிட்ட, இங்கிரிய, அகலவத்த, ஹொரணை மற்றும் புளத்சிங்ஹள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் 2 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையான செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.