உலகின் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜூன் பயன்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்துள்ளது. இதனை அடுத்து கொரோனாபை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இருப்பினும் தடுப்பு மருந்துகள் அனைத்தும் ஆராய்ச்சி அளவிலேயே உள்ளன. ரஷ்யா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக கூறினாலும் அதன் மீதான நம்பகத்தன்மை குறித்த கேள்வி நிருபுணர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பை துரிதப்படுத்த உலக சுகாதார அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் செய்தித்தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ், உலகின் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பு மருத்து பரிசோதனை நீண்ட நாட்கள் நடைபெற்றால் மட்டுமே அதன் பாதுகாப்பு தன்மை குறித்து நாங்கள் ஆராய முடியும் என தெரிவித்தார்.