இம்மாதம் பாகிஸ்தான் செல்ல விருந்த சீனப்பிரதமர் ஜி ஜின்பிங்கின் சுற்றுப் பயணம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அண்டை நாடாகவும் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகவும் பாகிஸ்தான் இருந்து வருகிறது. சீனா பாகிஸ்தானில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இரு நாடுகளின் இடையேயும் பொருளதார வழித்தடம், துறைமுக மேம்பாடு, நீர்மின்நிலையம், அணை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளன. இவை அனைத்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படுத்தப்படவுள்ளன. இதுமட்டுமின்றில் வணிக ரீதியாகவும் பல்வேறு திட்டங்களையும் பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தவுள்ளது.
சமீபகாலமாக பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சவுதியுடனான உறவில் பிளவு உள்ளிட்ட காரணங்களால் சீனாவுடனான நெருக்கம் பாகிஸ்தானுக்கு அதிகரித்து வருகிறது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா மீட்க நினைத்தால் அப்போது தங்களுக்கு சீனா பாக்கபலமாக இருக்கும் என்ற எண்ணமும் பாகிஸ்தானிடம் உள்ளது. இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாதம் பாகிஸ்தான் வரவிருந்தார்.
இந்நிலையில் பரவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணம் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும் பயணத்தின் மறு தேதியை உறுதி செய்ய இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சீனா இடையே தற்போது எல்லை மோதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சீன அதிபரின் பாகிஸ்தான் பயணம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.