அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் கமலாஹாரிஸ் ஒரு போதும் ஜனாதிபதியாக முடியாது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி பற்றி ஜனாதிபதி டிரம்ப் கூறும் கருத்துகளை தான் நம்ப போவதில்லை என கூறினார்.
அவரின் இந்த கருத்து டிரம்பிற்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கமலா ஹரிசை கடுமையாக விமர்சித்த நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் டிரம்ப் இது குறித்து பேசினார்.
அதில், கொரோனா தடுப்பூசி பற்றி இழிவாக பேசிவிட்டார், இதன் மூலம் இந்த சாதனையை மக்கள் ஏற்காதவண்ணம் அவர் பேசியுள்ளார்.
இது எனக்கான சாதனையல்ல, மக்களுக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை. மக்களை நோயிலிருந்து மீட்பதற்கான சாதனை. சிகிச்சையிலும் நாம் நன்றாகவே திகழ்கிறோம்.
நவம்பர் 3 தேர்தலுக்கு முன்பாகவே கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைத்து விடும் என்பது எதிர்க்கட்சியினரை பதற்றப்படுத்துகிறது.
டிரம்ப் சாதித்து விட்டார் என்று நினைத்து விடப்போகிறார்கள் எனவே தடுப்பூசியை இழிவுபடுத்துவோம் என்று அவர்கள் முடிவெடுத்து பேசி வருகின்றனர்.
இது நாட்டுக்கு நல்லதல்ல, உலகிற்கே அவர்கள் பேச்சு நல்லதல்ல. எனவே மக்கள் நலனுக்கு எதிராக தடுப்பூசி குறித்து இழிவாகப் பேசியதற்கு பைடனும், கமலா ஹாரிசும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
கமலா ஹாரிசுக்கு ஜனாதிபதியாகும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஒருபோதும் அவரால் ஜனாதிபதியாக முடியாது என்று கூறியுள்ளார்.



















