கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் தற்போது பின்பற்றுவதில்லை என இரத்தினபுரி மாவட்ட தொற்று நோய் பிரிவின் பிரதான வைத்திய அதிகாரி லக்மால் நுவன் கோனார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் இரண்டாவது கட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதுடன், அதற்கு முகம்கொடுப்பதும் கடினமாகிவிடும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமது சமூகத்தில் கொவிட் 19 அச்சுறுத்தல் தொடர்பில் காட்டுகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்தியற்றதாக இல்லை.
உலகம் முழுவதும் கொவிட் 19 வைரஸ் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இச்சமயத்தில் இலங்கையில் பாதுகாப்பு பிரிவினர், சுகாதார பிரிவினர் ஆகியோரின் பங்களிப்புடன் நாட்டு மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை அர்ப்பணிப்புடன் பேணி நடந்து கொண்டமையால் எமது நாட்டை இந்த வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிந்துள்ளது.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் முகம் கொடுத்த கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை அதிகமானவர்கள் தற்பொழுது மறந்துள்ளமை கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.