இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 20 முதல் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்ந்தன் தெரிவித்துள்ளார்.
உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்துவருகிறது. இங்கு நாளுக்கு நாள் கொரோனா பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளிலும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இதில் பிரிட்டனின் ஆஸ்ட்ராசென்கா நிறுவனத்துடன் இணைந்தும் இந்தியா கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஷர்ஷவர்தன், இந்தியாவில் மொத்தமுள்ள 130 கோடி மக்கள் தொகையில் 20 முதல் 25 கோடி மக்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்காக 400 முதல் 500 மில்லியன் வரையிலான தடுப்பூசிகளை பெற மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் யாருக்கு முன்னுரிமை தரவேண்டும் எனபது தொடர்பான மக்கள் தொகை பற்றிய விவரங்களை அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இதன்மூலம் மக்களுக்கு தடுப்பு மருந்துகள் எளிதில் வழங்க முடியும் என தெரிவித்தார்.
மேலும் கொரோனா தடுப்பு மருந்து முறையாக கொள்முதல் செய்யப்படுவதோடு வழங்குவதில் முதன்மை ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவை அளித்து வருவதோடு தடுப்பூசிக்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.