தமது உடல்நிலையை மறைப்பது, தவறான தகவல்களை வழங்குவது அல்லது கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மறைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற செயற்பாடுகளில் பலர் ஈடுபடுவது தெரிய வந்துள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.
டி.ஐ.ஜி அஜித் ரோஹன வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் ஆபத்து அதிகமாக உள்ள நேரத்தில் முக்கியமான தகவல்களை மறைப்பவர்கள் மீது குற்றவியல் கோவையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். வைரஸ் பாதிக்கப்பட்ட பின்னர் ஒரு நபர் இறந்துவிட்டால், அலட்சியம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
வைரஸின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அறிகுறிகளைக் காட்டும் நபர்களுடன் நெருக்கமாக தொடர்புடையவர்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
தொடர்புடைய தகவல்களை மறைப்பது குற்றமாக இருக்கும்போது, வைரஸின் அறிகுறிகளைக் காண்பிப்பவர்களை மறைத்து வைக்கும் முயற்சிக்கும் நபர்களும் ஒரு குற்றத்தைச் செய்கிறார்கள் என்று டி.ஐ.ஜி கூறினார்.
அத்தகைய நபர்களை மறைக்கப் பயன்படும் நகரக்கூடிய மற்றும் அசையாச் சொத்துகளும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் அதிகாரிகளால் கைப்பற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.