லண்டனில், வீடு ஒன்றில் தாயும் மகனும் சடலமாக கண்டெடுக்கப்பட, கத்திக்குத்துக் காயங்களுடன் கிடந்த தந்தையும் பின்னர் பலியானார்.
இந்நிலையில், அந்த தாயும் மகனும் இரண்டு வாரங்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியத் தமிழர்களான குகராஜ் சிதம்பரநாதன் (42), அவரது மனைவி பூர்ண காமேஷ்வரி சிவராஜ் (36) மற்றும் அவர்களது மகன் கைலாஷ் குகராஜ் (3) ஆகியோர் மேற்கு லண்டனில் வசித்துவந்தனர்.
செப்டம்பர் 21ஆம் திகதிக்குப்பின் பூர்ணாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வராததால் கவலையுற்ற அவரது உறவினர் ஒருவர் பொலிசாரை அழைத்துள்ளார். பொலிசார் வந்து பார்க்கும்போது வீடு உட்புறமாக பூட்டியிருக்க, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
பொலிசாரைக் கண்டதும் குகராஜ் தன்னைத்தான் கத்தியால் குத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு சிகிச்சையளிக்க முயற்சித்தும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
இதற்கிடையில் பொலிசார் அந்த வீட்டை ஆய்வு செய்தபோது, வீட்டுக்குள் பூர்ணா, அவரது மகன் கைலாஷ் மற்றும் அவர்களது நாய் உயிரிழந்து கிடந்ததை பொலிசார் கண்டுள்ளனர்.
தாயும் மகனும் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
அதாவது பூர்ணா தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என அவரது உறவினர் கூறிய செப்டம்பர் 21 அன்றே, குகராஜ் மனிவியையும் மகனையும் கொலை செய்துவிட்டு, அவர்களது உடல்களுடனேயே இரண்டு வாரங்களாக வாழ்ந்துவந்துள்ளார்.
பொலிசார் தேடி வரவும், தன்னைத்தான் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் குகராஜ்.
பல நாட்களாகவே தம்பதியருக்குள் பலத்த வாக்குவாதம் நடந்ததாகவும், ஊரடங்கின்போது அது மிகவும் மோசமானதாகவும், செப்டம்பர் 21க்குப் பிறகு அந்த வீட்டில் எந்த சத்தமும் இல்லை என்றும் அக்கம் பக்கத்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பூர்ணா, குகராஜ் இருவரின் குடும்பத்தாருக்கும் தங்களாலான உதவிகளை செய்ய இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.




















