கொரோனா வைரஸை மனிதர்கள் உருவாக்க முடியாது என பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் சூசன் வைஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள டிஎன்க்யூ டெக்னாலஜீஸ் தொழில்நுட்பப் பதிப்பகமும் அமெரிக்காவில் உள்ள ஜனேலியா ஆய்வு மையமும் இணைந்து ‘டிஎன்க்யூ – ஜனேலியா இந்தியா கோவிட்-19 – 2020’ (TNQ-Janelia India COVID-19 Seminar 200) என்ற தலைப்பில் தொடர் இணையவழி கருத்தரங்குகளை ஒருங்கிணைத்திருக்கின்றனர்.
கோவிட்-19 குறித்தும் சார்ஸ் கோவிட்-19 குறித்தும் உலகளவில் ஆராய்ச்சிகளை இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மாணவர்களுக்குக் கொண்டு செல்வதே இந்தக் கருத்தரங்கின் நோக்கம்.
(Coronavirus: Old and New) என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் கருத்தரங்கில், பேராசிரியர் சூசன் வைஸ் தலைமையுரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், கோவிட்-19 நோயை விளைவிக்கும் சார்ஸ் கோவ்-2 என்ற கொரோனா வைரஸானது பல்வேறு வழிகளில் செல்களில் புகுந்து பெருகுகிறது. அதே நேரம் இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து, இந்த வைரஸ் இயற்கையாகத் தோன்றியது என்றுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது.
ஏனென்றால் மனிதன் உடலில் உள்ள ஓம்புயிரி செல்களை இவ்வளவு துல்லியமாகத் சென்றடையக் கூடிய வகையில் குறிப்பிட்ட மாற்றங்களை (mutation) அடையக் கூடிய நுண்கிருமியை மனிதர்களால் வடிவமைக்க முடியாது. எனவே, இந்த வைரஸ் ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்பட்டிருக்க முடியாது என்று சூசன் வைஸ் தெரிவித்துள்ளார்..