பிரித்தானியாவில் அடுத்து ஆண்டு துவக்கத்தில் கார் ஓட்டும்போது மொபைலைத் தொட்டாலே 200 பவுண்டுகள் அபராதம் என்ற சட்டம் அறிமுகமாகவுள்ளது.
தற்போது, வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது மொபைலை கையில் வைத்து பேசினாலோ, குறுஞ்செய்தி அனுப்பினாலோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டம் உள்ளது.
ஆனால், அடுத்த ஆண்டு துவக்கம் முதல், மொபைலைத் தொட்டாலே அபராதம், அது பேசுவதற்கானாலும் சரி, குறுஞ்செய்தி அனுப்புவதற்கானாலும் சரி, புகைப்படம் எடுப்பதற்கானாலும் சரி, இணையத்தில் உலாவுவதற்கானாலும் சரி, பாடல் ஒன்றை ஒலிக்கச் செயவதற்காக மொபைலில் பாடலை தேடினாலும் சரி, 200 பவுண்டுகள் அபராதம் செலுத்த வேண்டியதுதான்.
அதே நேரத்தில், வாகன ஓட்டிகள் வழிகாட்டும் அமைப்பை பயன்படுத்தலாம், ஆனால் hands-free முறையில் மட்டுமே! வாகனங்களில் நேரடியாக சென்று கவுண்டரில் மொபைலை பயன்படுத்தி உணவு வாங்குவதற்கு கட்டணம் செலுத்த அனுமதி உண்டு.
ஆனால், hands-free வீடியோ அழைப்புகள் மற்றும் வீடியோ பார்ப்பதற்கு தடை… பிரித்தானியாவில் வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துவதால், நாளொன்றிற்கு ஐந்து பேர் உயிரிழப்பதுடன், 68 பேர் படுகாயமடைகிறார்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதையடுத்து, இந்த புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.