இந்தியாவில் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் சுமார் 30 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என பிரபல மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், அனைத்து முயற்சிகளும் வெற்றியை ஈட்டினால், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தடுப்பூசி திரளான மக்களின் பயன்பாட்டுக்கு கிடைத்து விடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கூட்டாக ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
குறித்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தி, தடுப்பூசிகளை தயாரித்து வினியோகிக்க புனேயை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.
இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் டிசம்பர் இறுதியில் 20 கோடி முதல் 30 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயாராகி விடும் எனவும்,
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உரிமம் தந்தவுடன், தடுப்பூசி வெளியீட்டை தொடங்கி விடலாம் எனவும் தெரிவித்துள்ளார் சீரம் நிறுவனத்தின் செயல் இயக்குனர் டாக்டர் சுரேஷ் ஜாதவ்.
மட்டுமின்றி, அனைத்து வகையான அனுமதியையும் பெற்றுவிட்டால் மாதம் ஒன்றுக்கு 6 கோடி முதல் 7 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி உற்பத்தியை இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் மேற்கொள்ள முடியும் என்றார்.
இதனிடையே, தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை நடந்து முடிவதற்குள், பெருமளவில் உற்பத்தி செய்வதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.