வியட்நாமில் கனழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ முகாம் ஒன்று மொத்தமாக மண்ணுக்குள் புதைந்ததில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியட்நாம் நாட்டில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குவாங் டிரை மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பெருவெள்ளத்தில் சிக்கி ஒரே வாரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 64 என அதிகரித்துள்ளது.
எப்போதும் இல்லாத வெள்ளப்பெருக்கை தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்த ஆண்டு எதிர்கொள்கின்றன.
அக்டோபர் மாத ஆரம்ப நாட்களில் கனமழை காரணமாக வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலச்சரிவு தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய வியட்நாம் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பாண் வான் ஜியாங்க்,
நாங்கள் இன்னுமொரு உறக்கமற்ற இரவை எதிர்கொண்டோம் என்றார். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், குண்டு வீச்சு போல மழை எங்கள் மீது விழுந்தது என தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவு 2 மணியில் இருந்தே அப்பகுதியில் 5 முறை நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், பலத்த சத்தத்துடன் வெடித்ததாகவும், அங்கிருந்த மலையே வெடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
குவாங் டிரை மாகாணத்தில் உள்ள ஆறுகளில் இருபது ஆண்டுகளில் காணாத வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, பேரிடர் மேலாண்மை ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தங்களது அபாய எச்சரிக்கையை இரண்டாவது மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது,
மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் குறித்து எச்சரிக்கை விடுத்தது. வியட்நாம் இயற்கை பேரழிவுகளுக்கு தொடர்ந்து ஆளாகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு டசின் புயல்களுக்கு மேல் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது, பெரும்பாலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகிறது.



















