சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், திங்கள்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கடைகள், அருங்காட்சியகங்கள், உணவகங்கள், தேவாலயங்கள் மற்றும் விளையாட்டு மையங்களில் உடை மாறும் அறைகள் உட்பட அனைத்திலும் திங்களன்று முதல் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடர்பில், தற்போதைய நிலையை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும் எனவும்,
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அண்மைய நாட்களில் மண்டல அதிகாரிகளும் மத்திய பொது சுகாதார அலுவலகமும் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி சிமோனெட்டா சோமருகா தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை கடந்த 10 நாட்களாக சுவிஸில் காணப்படுவதாகவும், எதிர்பார்த்ததைவிட பலமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் வெளிவிவகாரம் மற்றும் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குழப்பங்களைத் தவிர்ப்பதற்கு மண்டலங்களும் மத்திய அரசும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
மேலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒன்று கூடும் தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சிகளை தற்போதைய சூழலில் கட்டுப்படுத்த வேண்டும் எனவும்,
15 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடும் விழாக்களில் கண்டிப்பாக அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் 15 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடுவது திங்கள்கிழமை முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
உணவகங்கள் அல்லது விடுதிகளில் பொதுமக்கள் அமர்ந்தபடி மட்டுமே உணவருந்த அனுமதிக்கப்படும்.
பாடசாலைகள் மற்றும் சிறார் காப்பகங்களில் மாஸ்க் அணிவது தொடர்பில் அந்தந்த மண்டல நிர்வாகம் முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.