உலகம் கொரோனா பாதிப்பின் முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும் சில நாடுகள் ஆபத்தான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள் தோறும் அதிகரித்து வரும் இந்த பாதிப்பால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. இதனால் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருவதோடு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளிளையும் துரிதப்படுத்தியுள்ளன. இருப்பினும் வைரஸின் இரண்டாம் அலை பல்வேறு நாடுகளில் பரவத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், உலகம் கொரோனா பாதிப்பின் முக்கியமான கட்டத்தில் உள்ளது. அதிலும் வடக்கு அரைகோளத்தில் உள்ள நாடுகள் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளன. சில நாடுகள் வைரஸ் பாதிப்பின் ஆபத்தான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார தேவைகள் பற்றாக்குறை ஏற்படாமலும் தடுக்க வேண்டும் என தெரிவித்த அவர் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பை காணமுடிவதாகவும் தெரிவித்தார்.




















