இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், தொழிலில் ஏற்பட்ட பேரிழப்பு காரணமாக கிரிப்டோகரன்சி வர்த்தகர் ஒருவர் சொந்த குடும்ப உறுப்பினர்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் படிண்டா மாவட்டத்தைச் சேர்ந்த கிரிப்டோகரன்சி எனும் பிட்காயின் வர்த்தகர் ஒருவருக்கு தொழிலில் அடுத்தடுத்து நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
தொழிலில் ஏற்பட்ட தோல்வியால் மனமுடைந்த அவர் வியாழக்கிழமை இரவு தனது மனைவி, மகன் மற்றும் மகளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் வசித்துவந்த வாடகைவீட்டில் இந்த சம்பவம் அரங்கேறியதால் இரவு துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் வீட்டை சோதனையிட்டிருக்கின்றனர். அப்போது அந்த நபரின் தற்கொலை குறிப்பை கண்டெடுத்துள்ளனர்.
அதில் தன்னுடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதிக கடன் வாங்கியிருப்பதாகவும், பலரின் அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும், இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்றுக்கூறி ஒரு அரசியல்வாதி உட்பட 9 பேரின் பெயரையும் குறிப்பிட்டிருந்ததாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது அந்த 9 பேர்மீதும் பொலிசார் இந்திய சட்டப்பிரிவு 306 மற்றும் 34இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் தற்கொலை செய்துகொண்ட நபர்மீது குடும்பத்தாரை கொன்றக் குற்றத்திற்காக பிரிவு 302இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்குமுன்பே அந்த நபர் மற்றொரு குடும்பத்தாருடன் தொழில்ரீதியான தொடர்பு வைத்திருந்ததால் அவர்களிடமும் பொலிசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.