இலங்கையில் சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதியிடம் ஒரு மனுவை சமர்ப்பிக்க முன்னிலையில் நின்று செயற்பட்டிருக்க வேண்டிய தரப்பு, ஆளுந்தரப்பினருடன் சேர்ந்து அவர்களது சகாவான கொலையாளி ஒருவரை விடுதலை செய்ய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தக் கோருவது வெட்கக் கேடானது எனதொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
கொலைக்குற்றத்துக்காக மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரிய ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு 20ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஊடகங்களுக்கு இன்று விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மரண தண்டனைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது இதற்கு முன்பும் நடந்திருக்கின்றது. ஆனால், துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கோரிக்கை மனுவில் தமிழ் முற்போக்குக் கூட்டணி கையொப்பமிட்டுள்ள தருணம் ஆச்சரியத்தையும், சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
காரணம், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்தக் கோரிக்கை மனுவைத் தயார் செய்து கையொப்பமிட்டுள்ளனர். ஆளுந்தரப்பில் ஏற்கனவே 157 பேர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்த்தரப்பு எம்.பிக்களான தமிழ் முற்போக்குக் எஞ்சிய 5 உறுப்பினர்களும் கைச்சாத்திட்டதன் காரணமாகவே அந்த எண்ணிக்கை 160 எண்ணிக்கையைக் கடந்துள்ளது.
160 பேர் ஒப்பமிட்டதால் தான் நாங்களும் கையொப்பம் இட்டோம் என்பது சிறுபிள்ளைத்தனமானது. எந்த ‘எண்ணிக்கை’ அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என்பதும் இப்போது கசிந்துள்ளது.
20 இன் உள்ளடக்கம் வேறு இந்த கோரிக்கை வேறு என இப்போது சப்பைக் கட்டு கட்டலாம். இந்தக் கோரிக்கையை எந்த ஜனாதிபதியிடம் முன்வைக்கிறீர்கள்? 20 ஐ நிறைவேற்றுவதன் மூலம் சர்வாதிகாரியாக மாற்றப்படுவார் என நீங்கள் கூக்குரலிட்ட ஜனாதிபதியிடம் தானே.
அவருக்கு எதிராக வாக்களித்து விட்டு இப்போது அவரிடமே போய் ஒரு கொலைக் குற்றவாளி, அதுவும் ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதியரசர்கள் ஆயத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட விடயத்தில் அத்தகைய நீதிமன்றத்தின் தீர்ப்பை கேள்விக்கு உட்படுத்தும் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தக் கோருவதற்கு வெட்கப்பட வேண்டாமா?
கூட்டணியின் பதுளை மாவட்ட எம்.பி. 20 இற்கு ஆதரவாக வாக்களித்தமையை அவர் என்ன நியாயத்தைச் சொன்னாலும் ஏற்க முடியாது. அதேநேரம் வாக்களித்த அவருக்கு எதிராக உடனடியாக நீக்கல் உத்தரவைப் பிறப்பித்தவர்கள் அவர்களது கட்டளைத் தீர்மானத்தின் ஈரம் காய முன்னர் அந்த 20 இன் அதிகாரங்களைப் பயன்படுத்தக் கோரும் மனுவில் கையொப்பம் இட்டதை எப்படி நியாயம்படுத்த முடியும்? அந்தக் குற்றவாளியான முன்னாள் எம்.பி. துமிந்த திருந்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமாம்.
அப்படியாயின், கொலைக்குற்றம் அளவுக்கு இல்லாது தமது கூட்டணி தீர்மானத்துக்கு மாறாக ஒரு வாக்கை அரசுக்கு ஆதரவு வழங்கிய அரவிந்குமார் எம்.பியும் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாமே!
ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளும், சர்வாதிகாரத்தை விரும்பாத யாரும் இலங்கை அரசியல் அமைப்பின் இருபதாவது திருத்தத்தை ஏற்கமாட்டார்கள்.
அந்தவகையில் அரவிந்குமார் எம்.பி செய்தது வரலாற்றுத் தவறு என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், அவரது வாக்களிப்பு விவகாரத்தைச் சுட்டிக்காட்டி தமது அணியில் இருந்து உடனடியாக அவரை நீக்க உத்தரவிட்டவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வென்ற அதே அரசின் ஜனாதிபதியிடம் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரும் மனுவில் கையொப்பமிட்டதன் மூலம் 20ஆவது திருத்தத்துக்குள் தாமும் ஒளிந்திருந்தவர்கள் தான் என்பது அம்பலமாகியுள்ளது.
ஆக, அரவிந்குமாரின் திரையை அவசரமாக விலக்கப்போய் தமது முகத்திரைகளை முழுமையாக கிழித்துக்கொண்ட சந்தர்ப்பமாக இந்த மனு மீதான கூட்டணியின் கையொப்பம் அமைந்துவிட்டது.
இலங்கையில் சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதியிடம் ஒரு மனுவை சமர்ப்பிக்க முன்னிலையில் நின்று செயற்பட்டிருக்க வேண்டிய இந்தத் தரப்பு ஆளுந்தரப்பினருடன் சேர்ந்து அவர்களது சகா ஒருவரை விடுதலை செய்ய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தக் கோருவது வெட்கக்கேடானது.
ஒரு குற்றவாளி துமிந்த நினைவு வந்தவர்களுக்கு நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நினைவில் வரவில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.