மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணி விவகாரம் இலங்கை அரசின் உயர் மட்டத்தில் பூதாகரமாக வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ் விவகாரம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கிழக்கு மாகாண ஆளுநர் மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ளதுடன், ஆளுநரின் குறித்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் (29) சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்ற கிழக்கு மாகாண ஆளுநர் அங்கு மாடுகளை மேய்க்கும் பண்ணையாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார்.
இதேவேளை, அந்த பகுதியில் அத்துமீறி காடுகளை அழித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட தயாராகிவரும் சிங்கள மக்களையும் கண்ணூடாக கண்டதுடன் அந்த பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலட்சக்கணக்கான மாடுகளையும் பார்வையிட்டார்.
பண்ணையாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த கிழக்கு மாகாண ஆளுநர் அதற்காக நிரந்தர தீர்வு ஒன்றை வெகு விரைவில் பெற்று தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பண்ணையாளர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிங்கள மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.