பாதுகாப்புச் செயலாளராக இருந்த சந்திரானந்த டி சில்வா வை 1995ஆம் ஆண்டில் கனடாவுக்கான தூதுவராக நியமிக்க பரிந்துரைத்த போது, கனடா அதனை ஏற்க மறுத்தது.முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பலகல்லவையும் கூட, கனடா தூதுவராக ஏற்றுக் கொள்ளவில்லை.
விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் இன்றுடன் ஓய்வு பெறவுள்ளார். அவரை, கனடாவுக்கான தூதுவராக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.
கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற அட்மிரல் பியால் டி சில்வாவுக்கும், வெளிநாட்டுத் தூதவர் பதவி வழங்கப்பட்டிருகிறது.
அவர் ஆப்கானிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது, விமானப்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் எயர் மார்ஷல் சுமங்கல டயசை, கனடாவுக்கான தூதுவராக நியமிப்பதற்காக, அவரது பெயர், உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழுவுக்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்த பின்னர், இந்த நியமனம், கனடிய அரசாங்கத்துக்கு பரிந்துரைக்கப்படும்.
புதிய தூதுவராக அவரை கனடா ஏற்றுக் கொண்ட பின்னரே, அவரால் பதவியைக் பொறுப்பேற்க முடியும்.
இதுதான் எல்லா நாடுகளுக்குமான தூதுவர்கள் நியமிக்கப்படும் போது, கையாளப்படுகின்ற பொதுவான வழிமுறை.
வெளிநாட்டுத் தூதுவர்களை நியமிக்கும் போது, பெரும்பாலும் இந்த வழிமுறைகளில் தடங்கல்கள் ஏற்படுவதில்லை. விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுமங்கல டயசின் நியமனத்துக்கு, உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு தடைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இல்லை.
எனினும், கனடிய அரசாங்கம் இவரது நியமனத்தை ஏற்றுக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தச் சந்தேகம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம், எயர் மார்ஷல் சுமங்கல டயஸ், விமானப்படைத் தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தான், இந்தப் பதவிக்கு பிரேரிக்கப்பட்டிருக்கிறார்.
1986ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்து கொண்ட இவர், போர் தீவிரம் பெறத் தொடங்கிய காலத்தில் இருந்து, போர் முடிவுக்கு வந்த காலம் வரை- விமானப்படையில் ஒரு பொதுக் கடமை விமானியாகப் பணியாற்றியிருக்கிறார்.
1991ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிலாவத்துறை இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது.
அப்போது அந்த முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.
முற்றுகையிடப்பட்டிருந்த சிலாவத்துறை முகாமில் உள்ள படையினருக்குத் தேவையான வெடிபொருட்களைத் தரையிறக்கி விட்டு, காயமடைந்த நிலையில் இருந்து படையினரை ஏற்றி வருவதற்காக இரண்டு பெல் -412 ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.




















