அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரதான நுழை வாயிலுக்கு முன்பாக சுமார் ஐம்பது பேரடங்கிய மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருகையில்,
இவ்வாறு ஒன்றுகூடியவர்கள் அனைவருமே இரத்த பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்காக காலை 7.00 மணிக்கு வரும்படி வைத்தியசாலை நிருவாகத்தால் அழைக்கப்பட்டவர்கள்.
இவர்களுள் அநேகர் 60 வயது தாண்டிய முதியோர். 12 மணித்தியாலங்களாக உணவு சாப்பிடாமல் அழைக்கப்பட்டதுடன். முக கவசம் அணிந்து இருந்தார்களே தவிர சமுக இடைவெளி பேணப்படவில்லை.
காலை 6.30 மணியில் இருந்து நின்று கொண்டு இருந்தவர்களுக்கு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மூலமாக ஒரு செய்தி வழங்கப்பட்டுள்ளது.
காலை 7.30 மணிக்கு இதற்கு உரிய ஐயா, அம்மாமார் இந்த வாசலுக்கு வந்து உங்களை சந்திப்பார்கள், அதுவரையில் அப்படியே நில்லுங்கள் என்று. ஓரளவு நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த இவர்களுக்கு ஒன்றரை மணித்தியாலத்தின் பின்பு காலை 8.00 மணிக்கு ஒரு தொலைபேசி இலக்கம் கொடுக்கப்பட்டது.
வீடுகளுக்குப் போய் அந்த இலக்கத்தோடு தொடர்பு கொண்டு ஒழுங்கு செய்யும்படி இந்த வயோதிப நோயாளிகள் கேட்கப்பட்டார்கள். இந்த நாட்களில் வயோதிபர்களை வீட்டை விட்டே வெளியில் வர வேண்டாம் என்கிறது சுகாதாரத்துறை.
ஆனால் இவர்களைத் தெருவுக்கு வரவழைத்தது மட்டும் அல்லாமல் சமூக இடை வெளி பேணாமல் வைத்தியசாலை வாசலிலேயே ஒண்ணரை மணித்தியாலங்கள் பசிக்களைப்போடு நிற்க வைத்து வீட்டுக்கு திருப்பி அனுப்பியதற்கு யார் பொறுப்பு கூறப்போகிறார்கள்?.
இன்று இவர்களுக்கு வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருந்தால் நிர்வாகம் கூறப்போகும் பதில் என்ன.? இந்த வினாக்கள் இம் முதியோர்களின் குடும்ப அங்கத்தினர் மத்தியில் இருந்து எழுகின்றன.