கொரோனா பிரச்சினையே இன்னும் முடியாத சூழலில் கனடாவில் முதல்முறையாக ஒரு நபருக்கு H1N2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் முதல் முறையாக கொரோனா பரவத் தொடங்கியது. அதன்பின் படிப்படியாக கொரோனா தொற்று உலகம் முழுக்க பரவி கடந்த சுமார் 11 மாதங்களாக மனித இனத்தின் இயல்பு நிலையையே புரட்டி போட்டுள்ளது.
பல நாடுகளில் கொரோனாவில் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது.
இந்த சூழலில் கனடாவில் முதல்முறையாக ஒரு நபருக்கு H1N2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிக அரிதான பன்றி காய்ச்சலுக்கான வைரஸ் ஆகும். 2005ஆம் ஆண்டு முதல் இதுவரை உலகளவில் வெறும் 27 பேருக்கு மட்டுமே H1N2 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க பரவலாக காணப்படும் பன்றிக் காய்ச்சல் H1N1 வைரஸினால் பரவக்கூடியது. ஆனால் இந்த H1N2 வைரஸ் வித்தியாசமான தொற்று. இந்த வைரஸால் கனடாவில் பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவர் வசிக்கும் பகுதியில் அருகாமையில் யாருக்கும் H1N2 தொற்று கண்டறியப்படவில்லை. எனவே, பொதுமக்களுக்கு H1N2 தொற்று ஆபத்து இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு சார்ந்த பிரச்சினைகளால் H1N2 வைரஸ் பரவுவதில்லை. அதேபோல, பன்றி இறைச்சி சாப்பிடுவதாலும் இந்த வைரஸ் பரவாது. ஆனால், பாதிக்கப்பட்ட பன்றிக்கு அருகே சென்றால் இந்த வைரஸ் தொற்றிக்கொள்ள நேரிடும். அதேபோல, இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவாது என தெரியவந்துள்ளது.