பிரித்தானியாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.
குறிப்பாக பிரித்தானியாவின் இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் மீண்டும் ஒரு பொதுமுடக்கத்தை பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில், 532-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதத்திற்கு பின்னர் மிகப் பெரிய அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 87 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. கடந்த செவ்வாய் கிழமை 136 பேர் உயிரிழந்திருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
இதையடுத்து தற்போது அந்த எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 532-ஆக உயர்ந்துள்ளது. இது மே மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய தினசரி பலி எண்ணிக்கை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை சுகாதாரத் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 20,412 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை 49,770 ஆக உள்ளது. அதே நேரத்தில் 13,617 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கடந்த மே மாதம் 13-ஆம் திகதி 614 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது ஒரே நாளில் அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் இந்த வைரஸ் தொற்றால் 35 முதல் 100 வயதுக்குட்பட்ட 300 பேர் இறந்துவிட்டதாக NHS இங்கிலாந்து உறுதிப்படுத்தியது.
பலியானவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வடமேற்கை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பிரித்தானியாவில் 65,200-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தம் 63,110 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ONS அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,
கடந்த அக்டோபர் 30-ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 57,408 இறப்புகள் இதில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டதிலிருந்து, மேலும் 1,836 இறப்புகள் பிரித்தானியாவில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.
இருப்பினும் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 49-ஆயிரத்திற்கு மேல் என்று கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.