புத்தளம் தளுவை கடற்பிரதேசத்தில் சட்டவிரதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் நேற்று (11) இரவு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்படடுள்ளனர்.
குறித்த கடற்பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 முதல் 43 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் இவர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 32 பொதிகள் பொதி செய்யப்பட்ட 800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த மஞ்சள் மூடைகளை ஏற்றிச் செல்வதற்கு தயாராக இருந்த லொறியொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.