இந்தியாவை யாராவது சீண்டினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி மறைமுகமாக சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.
அதன் படி, இந்தாண்டு தீபாவளியை வீரர்களுடன் கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி ராஜஸ்தானின் லங்கேவாலாவிற்கு சென்றிருந்தார்.
வீரர்கள் மத்தியில் மோடி பேசுகையில், தங்களின் ஆட்சிப் பரப்பை விரிவாக்க வேண்டும் என்று செயல்படும் சக்திகளால் முழு உலகமே பிரச்னைகளை சந்திக்கிறது.
மற்றவர்களை புரிந்து கொள்வது மற்றும் அவர்களுக்கு புரியவைப்பது என்ற கொள்கையில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.
ஆனால், அதனை சோதிப்பதற்கு எந்த நாடாவது முயற்சி செய்தால் அந்த நாட்டிற்கு இந்திய கடுமையான பதிலடியை கொடுக்கும்.
உலகின் எந்த சக்தியாலும் நமது வீரர்கள் எல்லைகளை பாதுகாப்பதை தடுக்க முடியாது. சவால் விடுப்பவர்களுக்கு தகுந்த பதிலடியை கொடுப்பதற்கான பலமும், அரசியல் உறுதிப்பாடும் இந்தியாவிடம் இருக்கிறது.
வீரர்கள் புதுமை, யோகா பயிற்சி, சக வீரர்களிடம் இருந்து தங்களுக்கு தெரியாத மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான், சீனாவுடன் எல்லையில் பிரச்னை நீடித்து வரும் நிலையில். அந்த நாடுகளின் பெயர்களை குறிப்பிடாமல் பிரதமர் மோடி இவ்வாறு மறைமுகமாக அந்த இரண்டு நாடுகளையே எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.