ஸ்ரீவித்யா குருகுலத்திற்கான நிரந்தர கட்டடம் அமைக்கப்பட்டு அந்தணச் சிவாச்சாரியர்களுக்கான ஆகமக் கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் குரு குலத்திற்கான நிரந்தரக் கட்டடத்தினை அமைப்பதற்கான காணி கிளிநொச்சியில் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்கள், அமைச்சருக்கு ஆசியினையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த சிவஸ்ரீ பாபு சர்மா,
‘கடந்த 2001 ஆம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அனுசரணையுடன அந்தணச் சிவாச்சாரியர்களுக்கு ஆகமக் கல்வியை போதிப்பதற்காக கொழும்பு முகத்துவாரம் ஸ்ரீ சர்வாத்த சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் ஸ்ரீ வித்யா குரு குலம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த குருகுலத்தில் சுமார் 50 இற்கும் மேற்பட்ட அந்தணர்கள் கல்வி கற்று தற்போது ஆகமப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கான காணி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிடைத்திருக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது’ என்று தெரிவித்துள்ளார்.