பொகவந்தலாவ குயினா கீழ்ப்பிரிவு தோட்ட பகுதியில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொதுச்சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 9ஆம் திகதி குறித்த தோட்ட பகுதியில் 150 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனுப்பி வைக்கப்பட்ட மாதிரியில் இன்று விடியற்காலை வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை பொகவந்தலாவ பொதுச் சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதியில் மாத்திரம் இதுவரையில் 31 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்ட பகுதியில் தொற்றுக்கு உள்ளானவர்களுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் தரம் 6ல் கல்வி பயின்று வந்த பாடசாலை மாணவி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் 51, 20, 11 ஆகிய வயதுகளைக் கொண்டவர்கள்.
இதேவேளை 20 வயது இளைஞன் போபத்தலாவ மரக்கறி பண்ணையில் தொழில் புரிந்து வந்தவர் எனவும் தந்தை தோட்டத் தொழிலாளி எனவும் பொதுச் சுகாதார அதிகாரிகளின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர்கள் குறித்த தோட்ட பகுதியில் ஏற்கனவே தொற்றுள்ளவர்களோடு தொடர்புகளைப் பேணிவந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொற்றுக்கு உள்ளான மூன்று பேரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















