தமிழகத்தில் கந்து வட்டி தொல்லையாலும், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாலும், தந்தை ஒருவர் தன்னுடைய மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு, மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (38). தச்சுத் தொழிலாளியான இவருக்கு விமலேஸ்வரி (35) என்ற மனைவியும், ராஜஸ்ரீ (8), வித்யஸ்ரீ (6) என்ற மகள்களும், ஸ்ரீபாலன் (4) என்ற மகனும் உள்ளனர்.
மோகன்ராஜ், வளவனூர் மெயின் ரோட்டில் மரப்பட்டறையும் நடத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை நீண்டநேரமாகியும் மோகன்ராஜ் வீடு பூட்டியே கிடந்தது. மரப்பட்டரையில் வேலை செய்யும் பரந்தாமன் என்பவர் காலை 8.30 மணிக்கு வேலைக்கு வந்துள்ளார்.
மரப்பட்டரையை திறக்க மோகன்ராஜ் வராததால் சந்தேகமடைந்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முன்பக்க கதவு பூட்டியிருந்ததால், பின்பக்க ஜன்னலை திறந்து பார்த்தபோது விமலேஸ்வரி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் இது குறித்து உடனடியாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவிக்க, அதன் பின் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொலிசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ராஜஸ்ரீ, வித்யஸ்ரீ, ஸ்ரீபாலன் ஆகிய மூன்று பேரும் ஒரே புடவையில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர்.
மோகன்ராஜ், விமலேஸ்வரி தனித்தனியாக பேனில் தூக்கில் பிணமாக தொங்கினர். இதை பார்த்து உறவினர்களும், அப்பகுதியினரும் கதறி அழுத்தனர்.
பின்னர் சடலங்களை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, பொலிசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், திருமணத்திற்கு முன்பு மோகன்ராஜ் சென்னையில் தங்கி தச்சு வேலை செய்து வந்ததும், சமீபத்தில் சொந்தமாக மரப்பட்டறை வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது.
மோகன்ராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி சொந்தமாக வீடு கட்டியதும், மரப்பட்டறையை விரிவுபடுத்த நண்பர்களிடம் கடன் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. ஊரடங்கினால் மரப்பட்டறை தொழில் நடக்காததால் மோகன்ராஜ் கடனுக்கு கந்து வட்டி கட்ட மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுக்கவே மனஉளைச்சலில் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
முதலில் மூன்று குழந்தைகளையும் ஒரே தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு பிறகு கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.



















