நுவரெலியா – குதிரை பந்தய திடல் மற்றும் நுவரெலியா கிரகரி ஏரி ஆகியவற்றுக்கு இடையே மோட்டார் பந்தய பாதையை அமைக்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு மண்டலத்தை சுற்றுச்சூழல் நட்பு முறையில் செயற்படுத்த இந்த வார இறுதியில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் கீழ் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கிதுல்கல முதல் நுவரெலியா, நுவரெலியா முதல் கண்டி மற்றும் நுவரெலியா முதல் பதுல்ல வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
கொட்டகலை ஈரநில நில மேம்பாட்டுத் திட்டம், தலவாக்கலை நகரை அழகுபடுத்தும் திட்டமும் நாளை சனிக்கிழமை ஆரம்பிக்கப்படுகின்றன.
நுவரெலியா குதிரைப்பந்தய திடல் , ரம்பொட மற்றும் தவலந்தென்ன சுற்றுலா திட்டம் என்பன எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.
பல ஆண்டுகளாக முறையாக அபிவிருத்தி செய்யப்படாத நுவரெலியா குதிரை பந்தய திட்டம் 700 மில்லியன் ருபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
குதிரைச்சவாரி நிகழ்வுகளுக்கு இடமளிக்கும் வகையில் இந்த பாதை மேம்படுத்தப்படும். அத்துடன் பந்தயத்திடலின் மையத்தில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் ரக்பி ஆகிய மூன்று மைதானங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், நுவரெலியாவிலிருந்து நானு ஓயா தொடருந்து நிலையம் வரை 3.9 கிலோமீற்றர் நீளமுள்ள கேபிள் சிற்றூந்து அமைப்பும் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.