இலங்கை அரசே, சிறுபான்மையினரின் மனித உரிமைகளை மதிக்கவும் என்ற தொனிப்பொருளில் கொவிட்-19 காரணமாக உயிரிழப்பவர்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுவதனை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வாழைச்சேனையில் வெள்ளைத் துணிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வாழைச்சேனை முகைதீன் ஜிம்மா பள்ளிவாயல் முன்பாக நுகர் தொழுகையை அடுத்து ஒன்று கூடிய பலர் வெள்ளை நிறத் துணியிலான துண்டுகளை கட்டி ஜனாசா எரிப்பிற்கு எதிரான கண்டனங்களை வெளியிட்டதுடன் அவ் நடவடிக்கையினை நிறுத்தி ஜனாசாக்களை அடக்கம் செய்ய உதவுமாறு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுக்கொண்டனர்.
இவ் வெள்ளைத் துணிப் போராட்டமானது நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களுக்கான இறுதி கிரியைகளை இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக மாலைதீவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி இப்ராஹிம் முகமட் சோலி ஆராய்ந்து வருவதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாகீட் தமது டுவீட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.