லண்டனில் கண்டறியப்பட்டு, பிரித்தானியாவின் பல பகுதிகளில் வேகமாக பரவும் புதிய கொரோனா பெருந்தொற்று தொடர்பில் நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தானதாக கருதப்படும் புதிய கொரோனா தொற்றானது முந்தைய கொரோனா தொற்றை விடவும், குழந்தைகளை மிக விரைவில் தாக்கக் கூடியது என பிரித்தானிய நிபுணர்கள் தற்போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
புதிய கொரோனா தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ள பிரித்தானிய நிபுணர்கள், இந்த புதிய தொற்று குழந்தைகளை அதிகமாகவும் வேகமாகவும் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், புதிய இந்த கொரோனா தொற்று தொடர்பில் சரியான வழிமுறை இன்னும் தெளிவாக இல்லை. ஆனால் அதை தரவுகளிலிருந்து நாம் காணலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
புதிய இந்த கொரோனா பெருந்தொற்று பிரித்தானியாவில் மட்டுமல்ல, அவுஸ்திரேலியா, ஐஸ்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போதைய இந்த சூழல் கட்டுக்குள் இருப்பதாகவே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் அதன் பரவலை தடுக்கும் நோக்கில் நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ளது.
மேலும், தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் என குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு,
நேரடி தொடர்புகளை குறைத்துக் கொள்வதுடன், அடிக்கடி கைகளை உரிய முறையில் சுத்தம் செய்வதை விட்டுவிடாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, பிரித்தானியாவில் பரவும் புதிய இந்த கொரோனா தொற்றால், ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் 40 நாடுகள் பிரித்தானியாவில் இருந்து முன்னெடுக்கப்படும் விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது.



















