முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமுழமுனை மற்றும் அளம்பில் பகுதிகளில் வீதியில் சென்ற இரண்டு பெண்களிடம் சுமார் மூன்றரை பவுண் தங்க சங்கிலிகளை கொள்ளையடித்து சென்ற இரண்டு நபர்கள் கோம்பகஸ் சந்தியில் வைத்து அரச புலனாய்வாளர்களால் தடுக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குமுழமுனை பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் சுமார் இரண்டேகால் பவுண் தங்க சங்கிலி ஒன்றை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இதன்போது அந்தப் பெண் கழுத்தில் காயமடைந்ததுடன், மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பாரிய காயங்களுக்கு உட்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அதே நபர்கள் அளம்பில் பகுதியில் இன்னும் ஒரு பெண்ணிடம் ஒன்றேகால் பவுண் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
குறித்த விடயம் அரச புலனாய்வாளர்களின் காதுகளுக்கு எட்டியதும், கோம்பகஸ் சந்தியில் வைத்து பிரதேச இளைஞர் சிலரின் உதவியோடு மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டிருந்தனர். சம்பவம் அறிந்த அரச புலனாய்வாளர்கள், கொள்ளையர்கள் வெலிஓயா பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது உடனடியாக கோம்பகஸ் சந்திக்கு சென்ற அரச புலனாய்வாளர்கள் மற்றும் பிரதேச இளைஞர்கள் அவர்களை வழி மறித்து சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட மூன்றரை பவுண் தங்கச்சங்கிலிகளும் அகப்பட்டிருந்தன
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு இரண்டு நபர்களும் தங்கச்சங்கிலி இரண்டும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் முல்லைத்தீவு பொலிஸார், கொள்ளையர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















