விபத்திற்குள்ளான பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். அவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதான முச்சக்கர வண்டி சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாதுவ பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அந்தப் பெண், நேற்று முன்தினம் இரவு (27) இரவு வேலை முடித்து, வாகனமொன்றில் வந்து களுத்துறை வடக்கு நாகஸ் சந்தியில் இறங்கி, வீட்டிற்கு நடந்து செல்லும் போது முச்சக்கர வண்டியில் மோதியுள்ளார். முச்சக்கர வண்டி விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது. நடக்க சிரமப்பட்ட பெண், வீதியோர மதிலொன்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அந்த பெண்ணைக் கண்டதாகவும், அவரை எழுந்து நிற்க வைத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில், அருகிலுள்ள கடைக்கு முன்னால் இருந்த ஒரு முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகஸ் சந்தி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்தகத்திற்கு அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
முச்சக்கர வண்டியின் சாரதி அந்த பெண்ணை நாகொட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, வெளிநோயாளர் பிரிவிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். எனினும், வைத்தியசாலைக்கு வந்ததும் பெண்ணின் மனம் மாறியது. வீட்டில் சிறிய குழந்தைகள் இருப்பதால் வைத்தியசாலைக்கு செல்லவில்லை, தன்னை வீட்டில் விடுமாறு கேட்டுள்ளார்.
அத்துடன் கணவனை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். குறிப்பிட்ட இடமொன்றில் அவரை நிற்குமாறும் அங்கு வருவதாகவும் கணவர் கூறினார்.
அந்த பெண் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தார்.
கணவர் குறிப்பிட்ட இடத்தை விட வேறு இடமொன்றை நோக்கி முச்சக்கர வண்டி செல்வதாக சந்தேகமடைந்த பெண் அது பற்றி சாரதியிடம் கேட்டபோது, சரியான திசையில் செல்வதாக சாரதி குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட நேரமாக மாற்று பாதைகளில் சுற்றி, ஆளரவமற்ற வயல் பகுதிக்கு அழைத்து சென்று, அந்த பெண்ணை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கினார். பின்னர் இருளில் அந்த பெண்ணை விட்டுவிட்டு தப்பிச் சென்றார்.
அந்தப் பெண் நடந்து சென்று வர்த்தக நிலையமொன்றில் தனக்கு நடந்த சம்பவத்தை கூறியதையடுத்து, கணவனிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் பொலிஸ் முறைப்பாட்டின் பின்னர் பெண் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பொலிசார் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் நேற்று முச்சக்கர வண்டி சாரதியான ஆசாமி கைது செய்யப்பட்டார்.